பி.எஸ்.என்.எல். செயல்பாட்டு லாபம் ரூ.672 கோடி: மார்ச் மாதத்துக்குள் 4ஜி சேவை தொடக்கம் :
மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., கடந்த 2014-2015 நிதி ஆண்டில் செயல்பாட்டு லாபமாக ரூ. 672 கோடியைப் பெற்றது என்று அறிவித்திருக்கிறது.
எனினும் நிகர அளவில் நிறுவனம் ரூ. 8,234 கோடி இழப்பை சந்தித்தது என்று அதன் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அனுபம் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.
புது தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் தெரிவித்ததாவது:
2006-ஆம் ஆண்டு, நாட்டில் தொலைத் தொடர்பு சேவை வழங்குவதில் முதலிடத்தில் இருந்தது பி.எஸ்.என்.எல். ஆனால் 2006-ஆம் ஆண்டு முதல்
2012 வரை, சேவைகளை விரிவாக்கம் செய்ய உதவும் வகையில், புதிய தொழில்நுட்ப சாதனங்களை வாங்காததால் போட்டியில் பின் தங்கி, வீழ்ச்சி அடைந்துவிட்டோம். அந்த காலகட்டத்தில்தான் நாட்டின் தொலைத் தொடர்பு சேவை அதிவேக வளர்ச்சி அடைந்தது.
சென்ற சில ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல். நஷ்டத்தில் இயங்கி வந்தது.
ஆனால் கடந்த 2014-2015 நிதி ஆண்டில் பி.எஸ்.என்.எல். நிறுவனம்
அளித்து வரும் சேவைகளின் மூலம் பெற்ற வருவாய் 4.16 சதவீதம்
அதிகரித்து ரூ. 27,242 கோடியாக இருந்தது. கடந்த 5 ஆண்டு அளவில்
இதுவே மிக அதிக வருவாயாகும்.
செலவுகள் போக நிறுவனம் ஈட்டிய செயல்பாட்டு லாபம் ரூ. 672
கோடியாக இருந்தது.
எனினும் நிகர அளவில் நிறுவனம் ரூ. 8,234 கோடி இழப்பை சந்தித்தது.
குரல் சேவை அளிப்பதில் நிறுவனம் பின் தங்கிவிட்டது. தற்போது,
இணையதள அடிப்படையில், தகவல் சேவைகளில் கூடுதல் கவனம்
செலுத்தி வருகிறோம். மொத்த வருவாயில் செல்லிடப்பேசி சேவையின்
பங்களிப்பு 10 சதவீதமாகும்.
பிற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெரும் கடன் சுமையில் சிக்கித்
தவித்து வருகின்றன.
ஆனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சொத்து மதிப்பு - கடன் விகிதம்
மிகவும் ஆரோக்கியமாக, 1 சதவீதத்துக்கும் குறைவாக 0.13 சதவீதமாக
உள்ளது.
நிறுவனத்தின் நெட்வர்க் தொடர்புகளை அதிகரிக்கும் பணியில் ரூ. 7,700 கோடியை இவ்வாண்டு முதலீடு செய்யவுள்ளோம்.
நிதி ஆண்டின் இறுதிக்குள், அதாவது அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள்
4ஜி தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைகளை அளிக்கத் தொடங்குவோம். முதல் கட்டமாக, 2600 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் 4ஜி தொலைத் தொடர்பு சேவைகளை சில குறிப்பிட்ட நகரங்களில் அளிப்போம். பி.எஸ்.என்.எல்.லுக்கு சொந்தமான மொபைல் கோபுரங்களைப்
பிற நிறுவனங்களும் பயன்படுத்தும் விதமாக ஒப்பந்தம் ஏற்படுத்தி
வருகிறோம். கோபுரப் பயன்பாடு மூலம் பெற்ற வருவாயில் 42 சதவீத
வளர்ச்சி உள்ளது. தொலைத் தொடர்பு கோபுர வணிகச் செயல்பாடுகளைத்
துணை நிறுவனமாக அமைக்க மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிவிட்டது. விரைவில் அது அமைக்கப்படும் என்றார் அவர்.
No comments:
Post a Comment