Sunday, August 14, 2016


                                    

     நாடு விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15 நன்னாளில் நாட்டு மக்கள்
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !.
வணிகம் என்ற பெயரால் நாட்டை தனதாக்கிக் கொண்ட வெள்ளை 
ஏகாதிபத்தியத்தை தாயகத்திலிருந்து வெளியேற்ற போராடி இன்னுயீர்
ஈந்த தியாகிகளுக்கு வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்


உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்கிற மாயக் கொள்கையின் 
காரணமாக அன்னிய மூலதனத்தின் பேராபாயத்தை சந்தித்து வருகின்றோம்.
இந்தியாவின் ஆலயம் என நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால்
போற்றிப் புகழப்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள் கபளிகரம் செய்யப்பட்டு
வருவதைக்  காண்கின்றோம்.

இந்தியாவின் இதயம் கிராமங்கள் என தேசப்பிதா மகாத்மாவால் போற்றப்பட்ட
இந்திய கிராமங்கள் பொலிவு இழந்துள்ளன.

நாட்டின் ஏறத்தாழ 70 சதவிகித மக்கள் பங்கு பெறும் வேளாண்மை தொழில்
நலிந்து, நசுங்கி உழவர் பெருங்குடி மக்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விடுதலைப் பெற்ற பத்து ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கு
எட்டப்படவில்லை, கல்வி வணிக மயமாகி ஏழைகளுக்கு எட்டாக்கனி என்ற
நிலைக்கு தள்ளப்பட்டு, மீண்டும் குலக் கல்வி முறைக்கு இட்டுச் செல்லப்படும்
அபாயம் தொடங்கியுள்ளது.

தாய் மொழி உரிமைகள் பறிக்கப்பட்டு, பிற மொழி திணிக்கும் கபட நாடகம்
அரங்கேற முயல்கின்றது.

மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு அதிகார குவியல் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது.

மதச் சார்பற்ற ஜனநாயக சோசலிச குடியரசு என்ற பெருமிதத்தோடு
விளங்கும் நமது குடியரசில் மதம், சாதி என்ற பெயரால் மக்களை
பிளவுபடுத்தி மோதவிட்டு அவர்கள் சிந்தும் இரத்தத்தை சுவைத்து,
சுவைத்து, தனது குறுகிய அரசியல் சுயநலத்தை நிறைவேற்றிக் 
கொள்ள வாய் இல்லா ஜீவன் பசு பயன்படுத்தப்படுகின்றது.

கௌரவம் என்ற பெயரால் ஆணவக் கொலைகள் நாளுக்குநாள்
அதிகரித்து வருகின்றது.

ஆலயப் பிரவேசம் கண்ட நாட்டில் ஆலையப் தடுப்பு நடைபெறுகின்றது.
நள்ளிரவு நேரத்தில் கழுத்து நிரம்ப தங்க நகைகள் அணிந்து எவ்வித
அச்சமும் இன்றி பெண்கள் நடமாடும் நாள் வந்தால் தான் நாடு சுதந்திரம்
அடைந்ததாக பொருள் என்று கூறினார் மகாத்மா.

நள்ளிரவில் அல்ல பட்டப் பகலில் பெண்கள் நடமாட முடியாத 
அவலமும் கற்பழிப்பும் -- கொலையும், கொள்ளையும் நாட்டில் 
அதிக அளவில் நடப்பது வெட்க கரமானது.

ஒவ்வொரு இந்திய குடிமகனும், மதிக்கத்தக்க வாழ்க்கை வாழ 
வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் கண்ட கனவு மெய்யாகவில்லை.

சாதி பேதங்கள் மறைந்து, மூட நம்பிக்கை பழக்க வழக்கங்கள் 
அழிந்துயொழிய வேண்டுமென தந்தை பெரியார் கனவு மெய்யாகவில்லை

தனியொரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்.
என பாரதி முழங்கினான், அவனது முழக்கம் இன்றும் முற்றுப் பெறவில்லை 
வறுமைக் கோடு வளர்ந்து கொண்டே இருக்கின்றது.

இளைய பாரதம் வெம்பி விழுகின்றது. வேலையின்மை அதிகரிக்கின்றது.
லஞ்ச, ஊழல் தலைவிரித் தாண்டவமாடுகின்றது.

அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின்
வாழ்க்கை கேள்விக்குறியாக  மட்டுமல்ல அச்சம் நிறைந்ததாக உள்ளது.

இவைகளைக் கண்டு அஞ்சாது, துவளாது பெற்ற சுதந்திரத்தை பேணிக்
காக்கவும் புதியதோர் பாரத தேசத்தை உருவாக்கவும் விடுதலைப் 
போரினில் வீழ்ந்த மலர்களின் பேரால் சபதமேற்போம்!

No comments:

Post a Comment